53 இராணுவ வாகனங்கள் முழு சீரமைப்பு: தளபதி தலைமையில் ஒப்படைப்பு!
இலங்கை இராணுவத்தின் மின்சாரவியல் மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர்கள் (SLEME) பிரிவினரால் பழுதுபார்க்கப்பட்டு, சீரமைக்கப்பட்ட 53 வாகனங்கள் மீண்டும் முழுமையான இயக்க நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலாந்த பிரேமரத்னவின் வழிகாட்டலின் கீழ், மின்சாரவியல் மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர்கள் பிரிவின் நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்களால் இந்தச் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மின்சாரவியல் மற்றும் இயந்திரவியல் பொறியியல் பணிப்பகத்தின் நேரடிக் கண்காணிப்பில், SLEME இன் முதன்மைப் பட்டறைகளில் வைத்துப் பழுதுபார்ப்புப் பணிகள் மிகவும் நேர்த்தியாகச் செய்யப்பட்டுள்ளன.
புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான தேவையைக் குறைத்து, அதன் மூலம் பெருமளவிலான நிதியைச் சேமிப்பதற்கு இந்த நடவடிக்கை பெரிதும் வழிவகுத்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு முழுமையாகச் சீரமைக்கப்பட்ட 53 வாகனங்களும், இராணுவத் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின் போது, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலாந்த பிரேமரத்னவினால் சம்பந்தப்பட்ட இராணுவப் படைகளின் பிரதிநிதிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.