22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு அருகில் SJB தீவிர போராட்டம்
அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) வியாழக்கிழமை பத்தரமுல்லையிலுள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் பாரிய எதிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
போல்தூவ சந்தியில் இடம்பெற்ற இப்போராட்டத்தில், சீரற்ற வானிலையையும் பொருட்படுத்தாது பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அமைப்பாளர்கள் பலரும் இதில் பங்கெடுத்திருந்தனர்.
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தமானது நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றுக்குப் பலத்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டியுள்ள போராட்டக்காரர்கள், இச்சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தொடர்ச்சியாகக் கோஷங்களை எழுப்பினர்.
குறித்த 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான விவாதம் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே அதற்கு எதிர்ப்புக் தெரிவித்து இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த விவாதம் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இதேவேளை, சர்ச்சைக்குரிய இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மக்கள் தீர்ப்பு அவசியம் இல்லை எனவும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு விசேட பெரும்பான்மையுடன் இதனை நிறைவேற்ற முடியும் எனவும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.