சாரதி அனுமதிப்பத்திர மருத்துவப் பரிசோதனைக்கு இலவச முன்பதிவு சேவை அறிமுகம்!
ஓட்டுநர் உரிமத்திற்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளப் பொதுமக்கள் எவ்விதக் கட்டணமுமின்றி திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யக்கூடிய புதிய டிஜிட்டல் முறைமையை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் (NTMI) அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் மருத்துவச் சான்றிதழைப் பொதுமக்கள் எளிய முறையில் பெற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்டு, போக்குவரத்து அமைச்சினால் இப் புதிய நடைமுறை இன்று அறிமுகப்பபடுத்தப்பட்டது.
இப் புதிய முறைமையின் கீழ், இணையத்தளம் வழியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ இரு வழிகளில் முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
இணையத்தளச் சேவையைப் பயன்படுத்தும் விண்ணப்பதாரர்கள், appointment.ntmi.lk என்ற இணையமுகவரிக்குச் சென்று எந்தவொரு மேலதிகக் கட்டணமுமின்றி முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
தொலைபேசி மூலம் முன்பதிவு செய்ய விரும்புவோர், தங்கள் பகுதிக்குரிய தொலைபேசிக் குறியீட்டுடன் 2102021 என்ற இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம். உதாரணமாக, கொழும்பு அலுவலகத்தில் சேவையைப் பெற விரும்புவோர் 011 2102021 என்ற இலக்கத்தை அழைத்துத் திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிச் சான்றிதழைப் பெறலாம்.
நாடு முழுவதிலும் உள்ள 25 மாவட்டக் கிளை அலுவலகங்களையும் உள்ளடக்கிய வகையில் இப் புதிய முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தங்களுக்கு வசதியான திகதியையும் நேரத்தையும் மேலதிகக் கட்டணமின்றித் தேர்வு செய்ய முடியும் என்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.