தையிட்டி வழக்கு விசாரணைகள் ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 07ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தையிட்டி விகாரைக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார்கள் என குற்றம்சாட்டி, சிவகுரு ஆதின முதல்வர் வேலன் சுவாமிகள், உள்ளாட்சி மன்றத் தவிசாளர்கள் (Chairmen), பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலருக்கு எதிராக பலாலி காவல்துறையினரால் (Police) மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், குறித்த வழக்குகள் இன்றைய தினம் வியாழக்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போது, ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்ட குற்றம்சாட்டப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரணை செய்த நீதிவான், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 07ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.