நுவரெலியா கிரகரி வாவியின் வான்கதவு திறப்பு - பெருமளவு நீர் வெளியேற்றம்
நுவரெலியா - கிரகரி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிகமானதால் கடந்த (20) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளம் ஏற்படும் அபாயம் காரணமாக பாதுகாப்பு கருதி அதன் வான்கதவு திறக்கப்பட்டு பெருமளவு நீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக நானுஓயா நகரை கடந்து செல்லும் ஆறுகளின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது.
நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் தொடர் மழையினால் நுவரெலியா கிரகரி வாவியின் அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தமை காரணமாக வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும், அணையின் பாதுகாப்பைக் கருதி, நிர்ணயிக்கப்பட்ட கொள்ளளவுக்கு மேல் நீர் நிரம்பியதால் குறித்த வான் கதவு திறக்கப்பட்டு தொடர்ச்சியாக நீர் வெளியேற்றப்படுகிறது.
நுவரெலியாவில் தற்போதும் நிலவும் சிறிய மழை, காற்று மற்றும் அடர்ந்த பனி மூட்டம் காரணமாக நுவரெலியா கிரகரி வாவியில் படகு சவாரிக்கு அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது.
படகு சவாரி நிறுத்தப்பட்டு சுற்றுலா பயணிகளின்றி, வெறிச்சோடி காணப்படுகிறது நேற்று (23) முதல் பலத்த காற்று வீசியதுடன் அவ்வப்போது கன மழையும் பெய்தும் வருகிறது மழையின் காரணமாக சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.