‘ஹரக் கடா’வின் உயிரினுக்கு அச்சுறுத்தல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தந்தை முறைப்பாடு!
'ஹரக் கடா' (Harak Kata) என அறியப்படும் நடுன் சிந்தக்க விக்ரமரத்னவின் உயிருக்குச் சிறைச்சாலைக்குள் ஆபத்து நிலவுவதாகக் கூறி, அவரது தந்தை நெல்சன் மெர்வின் விக்ரமரத்ன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் (Human Rights Commission of Sri Lanka - HRCSL) முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
தனது மகனைக் படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
எதிரிகளுடன் ஒரே தடுப்பு முகாமில் அடைப்பு
வெலிசர கடற்படை முகாமில் அமைந்துள்ள 10 அறைகளைக் கொண்ட தடுப்புக் காவலில் தனது மகன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நெல்சன் மெர்வின் தெரிவித்துள்ளார். கேஹல்பத்தர பத்மே , பாக்கோ சமன் மற்றும் பாணந்துறை நிலங்க ஆகிய பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த மூவருடன் ஒரே வளாகத்திலேயே அவர் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே தனது மகனைக் கொலை செய்ய முயன்றதாக இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் நிலவுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோதல் செய்திகள் பொய்: படுகொலைக்கான திட்டமா?
கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி தனது மகனுக்கும் பத்மேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் பொய் என மறுத்துள்ள தந்தை, இந்தச் சம்பவத்தைச் சாட்டாக வைத்துத் தனது மகனைப் படுகொலை செய்யச் சதி நடப்பதாகக் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், தனது மகன் முழங்கால் காயத்தினால் பாதிக்கப்பட்டு ஊன்றுகோலின் உதவியுடனேயே நடப்பதாகவும், அவரது சுகாதார நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
அரச உயர் அதிகாரிகளின் ஊழல்களை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதே தனது மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்குக் காரணம் எனத் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி, இரண்டு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் ஆறு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் பல கோடி ரூபாயைப் கப்பமாகப் பெற்றுள்ளதாகவும், இதுகுறித்த தகவல்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர மற்றும் ஜனாதிபதியின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வழக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றால் 36 மாதங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டு, 26,000 மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்ட போதிலும், போதைப்பொருள் கடத்தல் அல்லது பெருங் குற்றங்கள் தொடர்பில் தனது மகனுக்கு எதிராகப் புதிய வழக்குகள் எதனையும் அதிகாரிகளால் தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு 12 கிராம் போதைப்பொருள் தொடர்பில் பதியப்பட்ட வழக்கே அவர் மீதான ஒரேயொரு நிலுவையிலுள்ள போதைப்பொருள் வழக்காகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தனது மகனின் வாழும் உரிமையைப் பாதுகாக்கவும், சட்டவிரோத அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் சட்ட ரீதியான விசாரணைகளை உறுதி செய்யவும் மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக தலையிட வேண்டும் என நெல்சன் மெர்வின் விக்ரமரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.