ஸ்லோவாக்கிய பாடசாலையில் கத்திக்குத்து: ஆசிரியை பலி
ஸ்லோவாக்கியாவின் (Slovakia) வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில், 13 வயது மாணவன் ஒருவன் மேற்கொண்ட கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செக் குடியரசு மற்றும் போலந்து எல்லைப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள, சுமார் 2,750 பேரைக் கொண்ட ஸ்தாஷ்கோவ் எனும் சிறிய நகரத்திலேயே இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதலில் 61 வயதான பெண் ஆசிரியை ஒருவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு மாணவன் மற்றும் 41 வயதான மற்றொரு பெண் ஆசிரியை ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அவசர உதவிச் சேவையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 13 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். நிலைமை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு மேலதிக அச்சுறுத்தல்கள் எதுவுமில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இத் தாக்குதலுக்கான பின்னணி காரணம் உடனடியாக தெரியவரவில்லை.
இச் சம்பவம் தொடர்பில் ஸ்லோவாக்கிய அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி தீவிர கவலையை வெளியிட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிபரும் பிரதமர் ரொபர்ட் ஃபிகோவும் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.
"இத்தகைய சம்பவங்கள் நமது சமூகத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு கடுமையான எச்சரிக்கையாகும். சமூகத்தில் நாம் உருவாக்கும் சுழல் குறித்து நாம் அதிக அவதானம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது. அமைதியும், பரஸ்பர மரியாதையும், புரிந்துணர்வும் நமக்கு இப்போது அவசியமாகின்றன" என அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு உள்துறை அமைச்சர், கல்வி அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் நேரில் விரைந்து நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர்.
ஸ்லோவாக்கிய பாடசாலைகளில் சமீபகாலமாக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டு, நாட்டின் வடபகுதியில் உள்ள உயர்தரப் பாடசாலை ஒன்றில் 18 வயது மாணவன் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் 51 வயது உப அதிபர் மற்றும் ஒரு மாணவன் உயிரிழந்தனர்.
முன்னதாக 2020 ஆம் ஆண்டில், வ்ருட்கி நகரில் உள்ள பாடசாலையில் முன்னாள் மாணவன் நடத்திய தாக்குதலில் உப அதிபர் கொல்லப்பட்டதுடன் ஐந்து பேர் காயமடைந்தனர். அதேபோன்று, 2022 ஆம் ஆண்டிலும் நோவாக்கி பகுதியில் மாணவி ஒருவர் சக மாணவரால் தாக்கப்பட்டு காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.