ஈரான் போரில் மிக விரைவில் அமெரிக்கா வெற்றி பெறும்: ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி
ஈரானுடனான இராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், கட்டார் உள்ளிட்ட சர்வதேச மத்தியஸ்தர்கள் ஊடாக அமெரிக்க அதிகாரிகள் திங்கட்கிழமை (28) மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், இப்போரில் அமெரிக்கா "மிக விரைவில்" வெற்றி அடையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே ஜனாதிபதி ட்ரம்ப் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், "நாங்கள் நிச்சயம் வெற்றி பெறப்போகிறோம். என்னைப் பொறுத்தவரை, ஒரு வழியில் அல்லது வேறு வழியில் இது சாத்தியமாகும். இப்போரின் இறுதி முடிவு மிக விரைவாக எட்டப்படும்" எனச் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், அமெரிக்கா இப்போரில் வெற்றி பெற்றவுடன், தற்போதைய பதற்ற நிலைமையினால் உலகளவில் உயர்ந்துள்ள எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய் (Crude oil) விலைகள் அதிரடியாகக் குறைந்து இயல்புநிலைக்குத் திரும்பும் என்றும் உறுதியளித்தார்.
இதேவேளை, கட்டார் மற்றும் பாகிஸ்தான் தூதர்கள் மூலமாக ஈரான் அனுப்பிய புதிய முன்மொழிவுகள் தொடர்பில், அமெரிக்க அதிகாரிகளுக்கும் சர்வதேச மத்தியஸ்தர்களுக்கும் இடையே திங்கட்கிழமை ஆலோசனைகள் நடைபெற்றதை ஜனாதிபதி ட்ரம்ப் உறுதிசெய்த போதிலும், அந்த பேச்சுவார்த்தையின் உள்விபரங்களை வெளிப்படுத்த மறுத்துவிட்டார்.
ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி இராஜதந்திர தீர்வுகளுக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்த நிலையிலும், அமெரிக்கா தனது உறுதியான நிலைப்பாட்டிலிருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்காது என்பதையே ஜனாதிபதி ட்ரம்பின் இந்த அறிக்கை தெளிவாக உணர்த்துகின்றது.