வெள்ளத் தடுப்புக்காக கொழும்பின் கால்வாய்களைத் தொடர்ச்சியாகப் பராமரிக்க வேண்டும் – பிரதமர் ஹரிணி
கொழும்பில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், அங்குள்ள கால்வாய்கள் மற்றும் நீர்வழிகளைத் தொடர்ச்சியாகச் சுத்தப்படுத்தி முறையாகப் பராமரிக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளப்பெருக்கு அல்லது ஏனைய அனர்த்தங்கள் ஏற்படும் காலங்களில் மாத்திரம் இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்காமல், அவற்றைத் தொடர்ச்சியான செயற்பாடுகளாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் கடந்த நவம்பர் 6ஆம் திகதி பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்ட கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நேற்று முன்தினம் (10) நாரஹேன்பிட்டியில் நடைபெற்றது. இதன்போதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, கொழும்பில் தொடர்ச்சியாக ஏற்படும் வெள்ளப்பெருக்குகளுக்கு நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளே காரணம் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கழிவு முகாமைத்துவம், முறையான கழிவகற்றல், நீர்வழிகளின் பராமரிப்பு மற்றும் தாழ்நிலப் பகுதிகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய விரிவான அணுகுமுறையின் ஊடாகவே இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல ஆண்டுகளாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் தீவிரமடைந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான தீர்மானங்களை இனியும் தாமதிக்காமல் எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் திடீர் அனர்த்தங்கள் மற்றும் வழமைக்கு மாறான வானிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
இதற்காகப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்படும் ஒருங்கிணைந்த அனர்த்த முகாமைத்துவப் பொறிமுறை அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் தொடர்பில் மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார கூட்டத்தில் விளக்கமளித்துள்ளார்.
இதன்படி, கொலன்னாவை பகுதியில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்காக 15 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் முன்னெடுக்கப்படும் திட்டம், களனி கங்கைப் பள்ளத்தாக்கு வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டம் மற்றும் கடுவெல பகுதியில் நீர்வழிகளைச் சுத்தப்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான 450 மில்லியன் ரூபா திட்டம் உள்ளிட்டவை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொலன்னாவை பகுதியில் நான்கு பிரதான கால்வாய்களைச் சுத்தப்படுத்தி அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் களனி கங்கையின் கரைகளை அபிவிருத்தி செய்வதற்கான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் திட்டம் ஆகியவையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், கிராமிய வீதி அபிவிருத்திப் பணிகள் மற்றும் 'பிரஜா சக்தி' வேலைத்திட்டம் ஆகியவற்றின் முன்னேற்றங்களும் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.