இலங்கையின் அரச ஊடக நிறுவனங்களுக்கு 6 மாதங்களில் ரூ.271 மில்லியன் நட்டம்!
இலங்கையின் அரசுக்குச் சொந்தமான மூன்று பிரதான ஒலிபரப்பு நிறுவனங்களும் 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்தமாக 271 மில்லியன் ரூபா நட்டத்தைப் பதிவு செய்துள்ளன.
நிதி அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் (SLRC) 2026 ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் வரிக்கு முந்தைய 166 மில்லியன் ரூபா நட்டத்தைப் பதிவு செய்துள்ளது.
அதேவேளை, சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ITN) குறித்த ஆறு மாத காலப்பகுதியில் 37 மில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளது.
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் 2025ஆம் ஆண்டு முழுவதிலும் 191 மில்லியன் ரூபா நட்டத்தைப் பதிவு செய்திருந்த நிலையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே அந்த நட்டத்தில் சுமார் 87 சதவீதத்தை எட்டியுள்ளது.
இதற்கு முன்னர் 2024ஆம் ஆண்டிலும் ரூபவாஹினி 247 மில்லியன் ரூபா நட்டத்தைப் பதிவு செய்திருந்தது.
மறுபுறம், 2024ஆம் ஆண்டு 3 மில்லியன் ரூபா இலாபத்தையும், 2025ஆம் ஆண்டு 62 மில்லியன் ரூபா இலாபத்தையும் பதிவு செய்திருந்த ITN நிறுவனம், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
இதேவேளை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் (SLBC) 2026 ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 68 மில்லியன் ரூபா வரிக்கு முந்தைய நட்டத்தைப் பதிவு செய்துள்ளது.
குறித்த நிறுவனம் 2025ஆம் ஆண்டு 203 மில்லியன் ரூபா நட்டத்தையும், 2024ஆம் ஆண்டு 176 மில்லியன் ரூபா நட்டத்தையும் எதிர்கொண்டிருந்தது.
இதற்கமைய, ரூபவாஹினி, ITN மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகிய மூன்று அரச ஊடக நிறுவனங்களும் இணைந்து 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 271 மில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளன.
இதேவேளை, இலங்கையின் பிரதான அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்தமாக 259.3 பில்லியன் ரூபா இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்த இலாபம் 227.8 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது.
பல அரச வங்கிகள் மற்றும் முக்கிய வர்த்தக நிறுவனங்கள் கணிசமான இலாபத்தைப் பதிவு செய்துள்ள போதிலும், அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கி வருகின்றமை இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.