கல்வி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்த அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் – அமைச்சரவை அங்கீகாரம்
உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின் இரண்டு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் அமெரிக்காவின் Southern Illinois பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் சபைக்கும் இடையில் முதலாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஊடாக கல்விசார் சிறப்புத் திறனை மேம்படுத்துதல், அறிவுப் பரிமாற்றம் மற்றும் கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.
இதன் கீழ், இரு பல்கலைக்கழகங்களும் இணைந்து ஆய்வுகள் மற்றும் கல்விசார் செயற்பாடுகளை முன்னெடுத்தல், விரிவுரைகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்காக கல்விசார் பணியாளர்களைப் பரிமாறிக்கொள்ளுதல், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், இரு பல்கலைக்கழகங்களும் இணைந்து மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் கல்விசார் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்வதுடன், தகவல் பரிமாற்றத்தையும் ஊக்குவிக்கவுள்ளன.
ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் இந்த ஒப்பந்தத்திற்கான முன்மொழிவை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
இதேவேளை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின் George Mason பல்கலைக்கழகத்திற்கும் இலங்கையின் ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இணையப் பாதுகாப்பு (Cybersecurity), ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV), விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (Machine Learning) மற்றும் 5G தொடர்பாடல் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இணைந்த ஆராய்ச்சிகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த துறைகளில் காணப்படும் தொழில்நுட்பச் சவால்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்குவதற்கும் இரு நிறுவனங்களும் இணைந்து செயற்படவுள்ளன.
ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் இந்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.