வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் மீது முல்லைத்தீவில் பாலியல் வன்புணர்வு, கொள்ளை முறைப்பாடு: பொலிஸார் விசாரணை
முல்லைத்தீவில் 33 வயதுடைய பெண் ஒருவர் குழுவாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவரிடமிருந்த தங்க நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
சவூதி அரேபியாவில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய கிழக்கிலங்கையின் அக்கரைப்பற்றைச் சேர்ந்த குறித்த பெண், நவம்பர் 4ஆம் திகதி இலங்கை திரும்பியுள்ளார். அங்கு தன்னுடன் பணியாற்றிய தோழி ஒருவரின் பொதியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்காக, அவரது தோழி ஏற்பாடு செய்த வாடகை வாகனத்தில் புதுக்குடியிருப்புக்குச் சென்றுள்ளார்.
பொதியை ஒப்படைத்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது, புதுக்குடியிருப்பு நகருக்கு அருகில் சாரதி மேலும் இருவரை வாகனத்தில் ஏற்றியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் வழங்கிய பானத்தை அருந்திய சிறிது நேரத்தில் தாம் மயக்கமடைந்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
அவரை ஆள்நடமாட்டமற்ற வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும், சுமார் 13 இலட்சத்து 23 ஆயிரத்து 750 ரூபா பெறுமதியான தங்க நகைகளையும் பணத்தையும் கொள்ளையிட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அருகில் மயங்கிய நிலையில் காணப்பட்ட அவரை, பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து 1990 சுவசெரிய அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் நினைவு திரும்பியதும் அவர் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.