வெறிநாய் நோய் ஒழிப்பு: புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
இலங்கையில் வெறிநாய் நோயை முற்றாக ஒழிப்பதைத் தேசிய இலக்காகக் கொண்டு, நாய்களைப் பதிவு செய்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் அவற்றின் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான விதப்புரைகளை உள்ளடக்கிய புதிய சட்டமூலம் இன்று (24) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களால் இந்தச் சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நாளை (25) நடைபெறவுள்ளது.
நாட்டிலிருந்து வெறிநாய் நோயை முழுமையாகப் நிர்மூலமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதையும் அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதையும் முறைமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இப்புதிய சட்டத்தின்கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
மேலும், வணிக நோக்கத்திற்காக நாய்களை இனப்பெருக்கம் செய்வதைக் கட்டுப்படுத்துவதற்கும், வளர்ப்பு நாய்களைச் சரியான முறையில் பதிவு செய்வதற்கான புதிய பொறிமுறையை உருவாக்குவதற்கும் இச்சட்டமூலம் வழிவகை செய்கிறது.
வெறிநாய் நோய் ஒழிப்புத் தொடர்பான கொள்கைகளை வகுக்கவும் வழிநடத்தலுக்குமாக 'வெறிநாய் நோய் ஒழிப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு'மற்றும் பிராந்திய ஆலோசனைக் குழுக்களை அமைப்பதற்கும் இதில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப்புதிய சட்டத் திருத்தங்களின் ஒரு பகுதியாக, தற்போது நடைமுறையிலுள்ள பழைய வெறிநாய் நோய் கட்டளைச் சட்டம் மற்றும் நாய்கள் பதிவு கட்டளைச் சட்டம் ஆகியன ரத்து செய்யப்படவுள்ளன.
இப்புதிய விதிகளின் அமலாக்கத்துடன் தொடர்புடைய பிற விடயங்களையும் உள்ளடக்கியுள்ள இச்சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் செப்டம்பர் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.