மருந்து இறக்குமதி விவகாரம்: கெஹலியவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை!
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டுத் தொகையை முழுமையாகச் செலுத்தத் தவறியமை தொடர்பில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையை விதிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், குறித்த நால்வரையும் பிணைப் பத்திரங்களின் அடிப்படையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்னதாக, நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டுத் தொகையை முழுமையாகச் செலுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதாகக் குறித்த மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததன் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக 2026 மார்ச் மாதம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதனடிப்படையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஐவருக்கு இழப்பீடு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, கெஹலிய ரம்புக்வெல்ல 75 மில்லியன் ரூபாவை இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும், இதுவரை 20 மில்லியன் ரூபாவை மாத்திரமே அவர் செலுத்தியுள்ளதாக விசாரணையின்போது அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
இழப்பீட்டுத் தொகையை முழுமையாகச் செலுத்தத் தவறியமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த உயர் நீதிமன்றம், முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த உள்ளிட்ட நால்வருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்து உத்தரவிட்டுள்ளது.