மோசமான வானிலை: நாடளாவிய ரீதியில் முன்பள்ளிகள் நாளை மூடப்படும்!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பகால சிறுவர் அபிவிருத்தி நிலையங்களும் நாளை (27) மூடப்படும் என தேசிய ஆரம்பகால சிறுவர் அபிவிருத்திச் செயலகம் அறிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பின்படி, நாட்டின் பல மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் சில பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை ஒருநாள் மாத்திரம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பகால சிறுவர் அபிவிருத்தி நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.