இலங்கையில் டெங்கு உயிரிழப்பு 79 ஆக உயர்வு; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,05,000 ஐத் தாண்டியது!
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 1,05,097 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 79 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நாடளாவிய ரீதியில் மேலும் 28 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு நோய்த் தொற்று அதிகம் பரவக்கூடிய அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
டெங்கு நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணமாக மேல் மாகாணம் தொடர்ந்து காணப்படுகிறது. இம்மாகாணத்தில் இதுவரை 54,673 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது நாட்டில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.02 சதவீதமாகும்.
மாவட்ட ரீதியாக அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை 22,053 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 20,384 பேரும், கண்டி மாவட்டத்தில் 8,378 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,592 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒக்டோபர் மாதத்தின் முதல் 25 நாட்களில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 4,377 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்தப் புள்ளிவிபரங்கள் நாட்டில் டெங்கு நோய்த் தொற்று தொடர்ந்து பரவி வருவதை எடுத்துக்காட்டுகின்றன. எனவே, பொதுமக்கள் தமது சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றி, டெங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகும்.