மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு: அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்டோருக்கு புதிய நீதிமன்றத் திகதி அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி (Bond) பரிவர்த்தனை தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கில், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு, நீதிபதி பிரியந்த லியனகே தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் (PTL) பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ், ஜெஃப்ரி அலோசியஸ், கசுன் பலிசேன உள்ளிட்டவர்களும், மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி. சமரசிறி, முத்துராஜா சுரேந்திரன், சித்த ரஞ்சன் ஹுல்லேகல்ல மற்றும் பி. குணவர்தன ஆகியோரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
எனினும், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜான் புஞ்சிஹேவா ஆகிய இரு பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், அவர்களின்றி வழக்கு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், வழக்குக்குத் தேவையான சில ஆவணங்கள் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து, அடுத்த நீதிமன்றத் திகதிக்கு முன்னதாக எஞ்சியுள்ள அனைத்து ஆவணங்களையும் பிரதிவாதிகள் தரப்பிடம் ஒப்படைக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஒஸ்வால்ட் பெரேராவுக்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.
2015ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி ஏலத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு 688 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.