மத்திய கிழக்கிற்கு வந்தடைந்தது அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கிப் போர்க்கப்பல்
அமெரிக்காவின் USS Theodore Roosevelt விமானம் தாங்கிப் போர்க்கப்பல் ஞாயிற்றுக்கிழமை மத்திய கிழக்குப் பிராந்தியத்தை வந்தடைந்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் மத்திய கிழக்கில் அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ள விமானம் தாங்கிப் போர்க்கப்பல் தாக்குதல் குழுக்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
National News மற்றும் Axios ஊடகவியலாளர் Barak Ravid ஆகியோர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.
பிராந்தியத்தில் மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் இந்தப் போர்க்கப்பலின் வருகை இடம்பெற்றுள்ளது. ஈரானுடன் தொடர்புடைய மோதலில், அமெரிக்காவின் நட்பு நாடான பஹ்ரைன் மீது ஞாயிற்றுக்கிழமை ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அண்மைக்காலமாக நிலவிய தாக்குதல் இடைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கு முன்னரும் கடந்த வெள்ளிக்கிழமை பஹ்ரைன் மீது ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பமான மோதலுக்குப் பின்னர், எரிசக்தி வளம் நிறைந்த வளைகுடா நாடுகள் பல தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ள நிலையில், செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் அந்நாடுகள் மீது நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல்களாக இவை குறிப்பிடப்படுகின்றன.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த வாரம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருடன் நடைபெறவுள்ள முத்தரப்புச் சந்திப்பில், மத்திய கிழக்கு போர் நிலவரம் குறித்து கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட இராஜதந்திர முயற்சிகள் இதுவரை போரை முடிவுக்குக் கொண்டுவரத் தவறியுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் போர் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.