மகாவலி நீர்ப்பாதுகாப்புத் திட்டத்திற்கு 60 மில்லியன் டொலர் கடன் – அமைச்சரவை அனுமதி
மகாவலி நீர்ப்பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முன்னெடுப்பதற்காக, சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்திடமிருந்து (OPEC Fund for International Development) 60 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, குறித்த கடனைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, 48 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 12 மில்லியன் அமெரிக்க டொலர் என இரண்டு பிரிவுகளின் கீழ் இந்த நிதியை வழங்குவதற்கு ஒபெக் நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 536.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம், இலங்கையின் வறண்ட வலயப் பகுதிகளில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல், நீர்வள முகாமைத்துவத்தை வலுப்படுத்துதல், காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் திறனை அதிகரித்தல் மற்றும் வறுமையைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டுள்ளது.
இத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஏற்கனவே 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. எஞ்சிய நிதியைப் பல்வேறு அபிவிருத்திப் பங்காளர்களின் இணை நிதியுதவி மூலம் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், பிரதான சுரங்கப்பாதையின் எஞ்சிய பகுதியை நிறைவு செய்தல், சுமார் 68 கிலோமீற்றர் நீளமான கால்வாய்கள் மற்றும் நீர்வழிப் பாதைகளை அமைத்தல், எல்லபொத்தான நீர்ப்பாசனத் திட்டத்தின் எட்டு கிலோமீற்றர் நீளமான கால்வாய்ப் பகுதியை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், அதிக பெறுமதியுடைய பயிர்கள் மற்றும் வயல் பயிர்களுக்குத் தேவையான நீரை விநியோகிப்பதற்காக சுமார் 13 அழுத்த நீர்ப்பாசன விநியோகக் கட்டமைப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
இதற்கு மேலதிகமாக, விவசாயிகள் நிதிச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஒபெக் நிதியத்திடமிருந்து 60 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க, கடந்த 2026 ஜூலை 20ஆம் திகதி அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.