ஹோமாகம பொலிஸ் காவல் மரணம்: சுயாதீன விசாரணைக்கு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை
ஹோமாகம பொலிஸாரின் காவலில் இருந்த 29 வயதுடைய சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், உடனடியான, பக்கச்சார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சட்டத்தரணிகள் சங்கம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இஷார ஹர்ஷகுமார என்ற 29 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் தொடர்பான விசாரணையொன்றின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததாகச் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள், அவரது உடலில் காயங்கள் காணப்பட்டதாகவும், அவர் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கலாம் எனத் தாம் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வேறுபட்ட விளக்கமொன்றை வழங்கியுள்ளதாகச் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொலிஸ் நடவடிக்கையொன்றின்போது சந்தேகநபருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தையும் சம்பவத்தின் பின்னணியையும் கண்டறிவதற்கு நம்பகமான, சுயாதீனமான விசாரணை அவசியம் எனச் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பொலிஸ் காவலில் உள்ளவர்களின் உயிர், உடல்நலம் மற்றும் உடல் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் அடிப்படையான பொறுப்பாகும் என்றும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொலிஸ் காவலில் இடம்பெறும் வன்முறைகள் அல்லது முறையற்ற நடத்தைகள் தொடர்பான எந்தவொரு குற்றச்சாட்டும் தீவிரமாகக் கருதப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள சங்கம், விசாரணைகளின் மூலம் தவறு இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின்படி பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், உயிரிழந்தவரின் மரணம் தொடர்பில் பிரேதப் பரிசோதனை நடத்த ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், ஹோமாகம உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பகட்ட விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து ஆதாரங்களும் முறையாகப் பாதுகாக்கப்பட்டு ஆராயப்படுவதை உறுதிப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், எவ்வித தலையீடுகளும் பக்கச்சார்புகளும் இன்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தேவையேற்பட்டால் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து தனது உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து அறிவிக்கவுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.