வனவிலங்கு இறைச்சி விவகாரம்: ஜய ஸ்ரீ மகா போதியின் பிரதம கபுராளருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவு
அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியின் மேல் வளாகத்தின் பிரதம கபுராளருக்கு எதிராக நீதிமன்றத்தில் முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் தசுனி ஹபுவாரச்சி நேற்று (26) உத்தரவிட்டுள்ளார்.
ரிதிகல வனவிலங்கு அலுவலகத்தின் வனவள அதிகாரிக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரிடமிருந்து வனவிலங்கு இறைச்சிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் தொடர்பான பொருட்கள் கைப்பற்றப்பட்டமை குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மரை இறைச்சி, எறும்புத்தின்னி இறைச்சி, மரை எலி இறைச்சி மற்றும் ஆமை இறைச்சி ஆகியவற்றுடன் 14 ஆமை முட்டைகள், ஆறு உயிருள்ள நட்சத்திர ஆமைகள் மற்றும் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட அலங்காரப் பொருள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.