ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்
ஏர்பஸ் விமானக் கொடுக்கல் வாங்கல் விவகாரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராகக் கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த வழக்கு இன்று (27) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இதனை நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
பிரதம நீதியரசரின் அனுமதியுடன், மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தக் குற்றப்பத்திரிகையில் 24 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், 59 சாட்சிகளும் பெயரிடப்பட்டுள்ளதாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கமைய, குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் இறுதி சந்தர்ப்பமாக இன்றைய தினம் அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், குறித்த வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.