போப் லியோ XIV அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய்: வெற்றிகரமான அறுவை சிகிச்சை
ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (13) அன்று மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம், போப் லியோ XIV (Pope Leo XIV) அவர்களின் வலது நுரையீரலின் கீழ் மடக்கு வெற்றிகரமாக அகற்றப்பட்டதாகவும், அவருக்கு நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer) இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் வத்திக்கான் (Vatican) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
71 வயதுடைய திருத்தந்தை, வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளின் போது அவரது நுரையீரலில் ஒரு சிறிய கணு கண்டறியப்பட்டதை அடுத்து, 90 நிமிடங்கள் நீடித்த இந்த அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக 'பிபிசி நியூஸ்' (BBC News) செய்தி வெளியிட்டுள்ளது.
அறுவை சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட திசுக்களின் பரிசோதனைக்குப் பிறகு, போப் அவர்களுக்கு நுரையீரல் அடினோகார்சினோமா (lung adenocarcinoma) எனப்படும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது மருத்துர்களால் உறுதிப்படுத்தப்பட்டதாக 'வத்திக்கான் நியூஸ்'தெரிவித்துள்ளது.
இந்த அறுவை சிகிச்சை எத்தகைய சிக்கல்களும் இன்றி வெற்றிகரமாக முடிவடைந்ததாகவும், சிறிது நேரம் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த திருத்தந்தை வழக்கம் போல் சுயநினைவு பெற்று தனது மருத்துவமனை அறைக்குத் திரும்பിയதாகவும் வத்திக்கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகற்றப்பட்ட திசுக்கள் மீது மருத்துவர்கள் மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருவதால், போப் அவர்கள் தோராயமாக ஒரு வாரத்திற்கு மருத்துவமனையிலேயே தங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புற்றுநோய் உடல் முழுவதும் பரவியுள்ளதா என்பதைத் துல்லியமாக உறுதிப்படுத்துவதற்காகக் கூடுதல் மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக 'பிபிசி நியூஸ்' (BBC News) குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், திருத்தந்தை பூரண நலம் பெறும் வகையில் அக்டோபர் 20-ஆம் தேதி வரை அவரது அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் மற்றும் சந்திப்புகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.