பேஸ்புக்கில் சிறுவர் புகைப்படங்களை பணமாக்குவதற்கு தடை: அமைச்சு எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை (Videos) பதிவேற்றம் செய்யும்போது பெற்றோரும் பாதுகாவலர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான பதிவுகள் சிறுவர்களின் பாதுகாப்புக்கும் தனிப்பரிசீலனைக்கும் (Privacy) பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என அமைச்சு எச்சரித்துள்ளது.
பேஸ்புக் (Facebook) போன்ற சமூக வலைத்தளங்களில் உள்ளடக்கங்களை பணமாக்கும் (Monetisation) வாய்ப்புகள் அதிகரித்துள்ளமையினால், பெற்றோரின் அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியோ சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் அதிகளவில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறுவர்களின் திறமைகள் அல்லது அவர்களின் அன்றாட நடவடிக்கைகளைக் காட்டும் வகையில், தனிநபர்களும் அமைப்புகளும் அவர்களின் காணொளிகளை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி வருவதும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களை வெளிப்படுத்தும் காணொளிகள் மற்றும் வலைப்பதிவுகள் (Vlogs) மூலம் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் அந்நியர்களுக்குத் தெரியவரக்கூடும். இது அவர்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் தேவையற்ற அபாயத்தை உருவாக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தீவிர வளர்ச்சி குறித்து கவலை வெளியிட்டுள்ள அமைச்சு, இணையத்தில் கிடைக்கும் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தவறாகப் பயன்படுத்தி, ஆபாசமான அல்லது பொருத்தமற்ற போலி உள்ளடக்கங்களை உருவாக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, சிறுவர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் ஏனையோர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும், சமூக வலைத்தளங்களில் சிறுவர்கள் தொடர்பான உள்ளடக்கங்களை வெளியிடும்போது விழிப்புடன் இருக்குமாறும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.