இலங்கையின் அரச சேவைகள் அனைத்தும் ஒரே டிஜிட்டல் கட்டமைப்பின்கீழ்: ஜனாதிபதி அனுர உத்தரவு!
இலங்கையின் அரச சேவைகளை ஒன்றிணைத்து, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொதுவான ஒருமைப்படுத்தப்பட்ட தேசிய டிஜிட்டல் கட்டமைப்பை (Unified National Digital System) உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டுள்ளார்.
வெவ்வேறான அரச நிறுவனங்கள் தனித்தனியாக வெவ்வேறான டிஜிட்டல் அமைப்புகளைக் கையாள்வதைத் தவிர்த்து, நாடு முழுவதும் ஒரே சீரான அமைப்பைக் கொண்டுவருவதே இதன் பிரதான நோக்கமாகும்.
ஜனாதிபதி செயலகத்தில் செப்டம்பர் 29ஆம் திகதி நடைபெற்ற முன்கனேற்ற மறுஆய்வுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இக்கட்டளையைப் பிறப்பித்தார். இதற்கமைய, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியன இணைந்து ஒருங்கிணைந்த முறையில் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை எவ்வித தடையுமின்றி சீராக முன்னெடுப்பதற்காக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மூன்று அதிகாரிகள் பொது நிர்வாக அமைச்சில் இணைக்கப்படவுள்ளனர். இவர்கள் தற்போதுள்ள அமைப்புகளில் காணப்படக்கூடிய குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றைச் சீரமைப்பதுடன், தேசிய அளவிலான டிஜிட்டல் வலையமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்கவுள்ளனர்.
இக்கட்டளையின் கீழ், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாவட்டத்தில் மாதிரித் திட்டமாக முழுமையாகச் செயற்படுத்தப்படும். அதன் பின்னரே இது நாடு தழுவிய ரீதியில் விரிவுபடுத்தப்படவுள்ளது.
ஏற்கெனவே பொலன்னறுவை மாவட்டத்தில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்ட நெல் கொள்முதல் மற்றும் பேரிடர் நிவாரண விநியோக டிஜிட்டல் முறைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. கிராம நிலதாரி பிரிவு முதல் மாவட்ட செயலகம் வரையிலான சேவைகளை ஒருங்கிணைத்து, பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் 300க்கும் மேற்பட்ட பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதே இதன் முக்கிய இலக்காகும்.
அத்துடன், அரச ஊழியர்களின் பணி நியமனம் முதல் ஓய்வுபெறுதல் வரையிலான மனிதவள மேலாண்மையை டிஜிட்டல் மயமாக்கும் "GovHR" தளம் மற்றும் "GovPay" போன்ற அமைப்புகளின் புதிய அம்சங்கள் குறித்தும் இங்கு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், வரிச் செலுத்தல்கள், வர்த்தக வாடகைகள், பயன்பாட்டுக் கட்டணங்கள் , பொது மண்டபப் பதிவுகள், அனுமதிப்பத்திரங்கள் வழங்கல் மற்றும் பொதுமக்களின் குறைதீர்க்கும் வழிமுறைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் முக்கிய சேவைகள் அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளன.