1, 2 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
புதிய பாடத்திட்ட சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை தனது முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இதற்கமைய, இந்த ஆண்டு முதலாம் வகுப்பிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதுடன், இரண்டாம் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு புதிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான அவர்களின் யோசனைக்கு அமைவாகவே இந்நடவடிக்கைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக 2026 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவிருந்த ஆறாம் வகுப்பிற்கான கல்விச் சீர்திருத்தங்கள் பிற்போடப்பட்டிருந்த நிலையில், அவை 2027 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. அதேவேளை, முதலாம் வகுப்பிற்கு இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
இந்த கல்விச் சீர்திருத்தங்களுக்கான முதற்கட்ட தயாரிப்புகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதன்படி, 2027 ஆம் ஆண்டின் மூன்று தவணைகளையும் உள்ளடக்கிய வகையில் 1 மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கான செயற்பாட்டுப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிகள் அச்சிடுவதற்காகத் தயாராக உள்ளன. மேலும், ஆறாம் வகுப்பிற்கான பாடக் கூறுகள் மற்றும் தொடர்புடைய ஆசிரியர் வழிகாட்டிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
தேசிய கல்வி ஆணைக்குழுவினால் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை பாடங்களுக்கான முதன்மைப் பயிற்சியாளர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதுடன், மாகாண மட்டத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசின் கல்வி மறுசீரமைப்பு செயன்முறையின் மூலம் பெறப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கி, தேசிய கல்வி ஆணைக்குழுவினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பாடத்திட்டக் கட்டமைப்பு மீளாய்வு செய்யப்பட்டே இந்த புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட பாடத்திட்டக் கட்டமைப்பிற்கு, புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கான தேசிய வழிநடத்தல் குழு கடந்த 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி தனது முழுமையான உடன்பாட்டை வழங்கியிருந்தது.
பாடசாலை அமைப்பில் உள்ள வளங்களைக் கருத்திற் கொண்டு, பாடசாலை சார்ந்த மதிப்பீடு மற்றும் கணிப்பீட்டுக்கான புதிய கொள்கை வழிகாட்டுதலும் இச்சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.