கிரிஷ் திட்டம்: சட்டவிரோதப் பணம் பயன்படுத்தப்பட்டதாக இந்திய அதிகாரத் தரப்பு தகவல்
கொழும்பு கோட்டை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட 'கிரிஷ்' (Krish) நிர்மாணத் திட்டத்திற்குச் சட்டவிரோதப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரத் தரப்பினால் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC), கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றில் தெரிவித்தது.
பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்ட குறித்த தகவல் தொடர்பிலான ஆவணம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) கையளிக்கப்பட்டு, கூட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உதவிச் சட்டப் பணிப்பாளர் அமை விஜேசிங்க நீதிமன்றிற்கு விவரித்தார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு கோட்டை நிலப்பரப்பை 'கிரிஷ் டிரான்ஸ்வேர்க்ஸ் கொழும்பு' நிறுவனத்திற்குப் குத்தகைக்கு விடுவதற்கு வசதி செய்து கொடுத்தமைக்காக, நிமால் பெரேரா ஊடாக நாமல் ராஜபக்ஷ 70 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், அரச நிறுவனங்கள் இத்திட்டத்திற்கான அனுமதிகளை வழக்கத்திற்கு மாறாக மிக விரைவாக வழங்கியுள்ளமை புலனாய்வில் தெரியவந்துள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியது.
நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதன்போது, நாமல் ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட சான்றிதழின் செல்லுபடியாகும் தன்மையைச் சவாலுக்குட்படுத்தியதுடன், முந்தைய லஞ்சச் சட்டத்தின் கீழேயே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்க வேண்டும் என வாதிட்டார்.
பிரதிவாதி சார்பில் பிணை மனுவை அடுத்த தவணையில் சமர்ப்பிக்குமாறு பணித்த நீதிமன்றம், நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.