500 உடலணி கேமராக்கள் கொள்முதல்: குற்றச்சாட்டுகளை மறுத்து பொலிஸ் திணைக்களம் தெளிவுபடுத்தல்
பொலிஸ் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 500 உடலணி கேமராக்களைக் (Body-worn cameras) கொள்முதல் செய்யும் குத்தகை நடைமுறையில் (Tender process) முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை பொலிஸ் திணைக்களம் முற்றாக மறுத்துள்ளது.
ஜன அரகலய வியாபார அமைப்பின்அமைப்பாளர் வசந்த முதலிகேயினால் முன்வைக்கப்பட்ட இக்கருத்துக்கள் எவ்வித அடிப்படையுமற்றவை என்றும், உறுதிப்படுத்தப்படாதவை என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஊடகங்களில் வெளியிடப்பட்ட இக்கூற்றுக்களைத் தொடர்ந்து, பொலிஸ் விநியோகப் பிரிவின் பணிப்பாளர் ஊடாக அறிக்கை ஒன்று கோரப்பட்டிருந்தது. அவ்வறிக்கையின்படி, தற்போதைய களப்பணித் தேவைகளைக் கருத்திற்கொண்டு 500 உடலணி கேமராக்கள் மற்றும் 70 இணைப்பு நிலையங்களை கொள்முதல் செய்வதற்கு பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்ட குழுவொன்று ஏகமனதாகப் பரிந்துரை செய்துள்ளது. இக்குழுவில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் , கணக்காளர் ஒருவர் மற்றும் 15 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மட்ட அதிகாரிகளும் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான போட்டித் தன்மையைப் பேணும் வகையில், அரசாங்கக் கொள்முதல் வழிகாட்டல்கள் , தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் ஏற்பாடுகள் மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாகவே இக்கொள்முதல் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், ஏல மதிப்பீட்டுக் குழுவினால் கொள்முதல் செய்வதும் குத்தகைக்கு எடுப்பதும் குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்ட பின்னரே தொழில்நுட்பக் குறிப்புகளும் நிபந்தனைகளும் தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தையில் உள்ள விநியோகஸ்தர்கள் போட்டிகரமாகப் பங்கேற்பதை உறுதிசெய்யும் வகையில் பத்திரிகைகள் வாயிலாகப் பகிரங்க அறிவித்தல்கள் விடுக்கப்பட்டதுடன், ஏலக் கோரிக்கைச் சமர்ப்பிப்புக்கான கால அவகாசமும் பலமுறை நீடிக்கப்பட்டுள்ளது. இக்கால நீடிப்பானது பங்கேற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டே மேற்கொள்ளப்பட்டதாகவும், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயற்படவில்லை என்றும் பொலிஸ் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது வரை ஏல மதிப்பீட்டுப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால், இதுவரை எந்தவொரு விநியோகஸ்தரும் தெரிவுசெய்யப்படவோ அல்லது ஒப்பந்தம் வழங்கப்படவோ இல்லை என வலியுறுத்தியுள்ள பொலிஸார், இந்நடவடிக்கை குறித்து ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் லஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) முறைப்பாடு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.