வட மாகாண மக்கள்தொகை தரவு பிழை: மத்திய வங்கி அறிக்கை குறித்து சுமந்திரன் கேள்வி
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வட மாகாணத்தின் மக்கள்தொகைத் தரவு முற்றிலும் தவறானது என்றும், உண்மையான எண்ணிக்கையில் பாதியளவு மட்டுமே அதில் காட்டப்பட்டுள்ளதாகவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் சமூகவலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், மத்திய வங்கியின் "நாட்டின் சுயவிவரம் - 2025" (Country Profile – 2025) அட்டவணையில் வட மாகாணத்தின் மக்கள்தொகை 557,000 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், வடக்கின் உண்மையான மக்கள்தொகை இதில் இரு மடங்கிற்கும் அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் குறித்த அட்டவணையில் இலங்கையின் மொத்த மக்கள்தொகை 21.756 மில்லியன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மாகாண ரீதியிலான மக்கள்தொகை பின்வருமாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது:
மேல் மாகாணம்: 6.104 மில்லியன்
மத்திய மாகாணம்: 2.712 மில்லியன்
தென் மாகாணம்: 2.603 மில்லியன்
வடமேல் மாகாணம்: 2.583 மில்லியன்
சபரகமுவ மாகாணம்: 2.012 மில்லியன்
கிழக்கு மாகாணம்: 1.784 மில்லியன்
வடமத்திய மாகாணம்: 1.406 மில்லியன்
ஊவா மாகாணம்: 1.401 மில்லியன்
வட மாகாணம்: 557,000
தொகைமதிப்பு புள்ளிவிவரத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தரவு
எனினும், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான உத்தியோகபூர்வ குடிமதிப்பு தரவுகளின்படி, வட மாகாணத்தின் மொத்த மக்கள்தொகை 1,150,148 ஆகும். இது இலங்கையின் மொத்த மக்கள்தொகையில் 5.3 சதவீதமாகும் (5.3%).
குறித்த உத்தியோகபூர்வ குடிமதிப்பின் மாவட்ட ரீதியிலான விவரங்கள் வருமாறு:
யாழ்ப்பாணம்: 594,751
வவுனியா: 172,312
கிளிநொச்சி: 136,710
மன்னார்: 123,756
முல்லைத்தீவு: 122,619
இதனடிப்படையில், அண்மைய உத்தியோகபூர்வ குடிமதிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வட மாகாண மக்கள்தொகையில் பாதியளவுக்கும் குறைவான எண்ணிக்கையையே மத்திய வங்கியின் அட்டவணை காட்டியுள்ளமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.