பிரவுன்ஸ் ஹில் காணி விவகாரம்: பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்குத் திறந்த பிடியாணை ஒன்றை மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள காணியொன்றைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் (FCID) இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையைப் பரிசீலித்ததைத் தொடர்ந்து, நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் எலியகந்த வீதியில் அமைந்துள்ள சுமார் ஒன்றரை ஏக்கர் காணியைக் கொள்வனவு செய்தமை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த காணி பசில் ராஜபக்ஷவுடன் தொடர்புடையது எனக் கூறப்படுகிறது.
தென்னந்தோட்டமாகக் காணப்படும் இந்தச் சொத்து, முன்னதாக ஹேர்பர்ட் கெல்லர் என்ற ஜேர்மன் நாட்டுப் பிரஜைக்குச் சொந்தமாக இருந்ததாகவும், பின்னர் பசில் ராஜபக்ஷவினால் 60 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி, குறித்த காணியைப் பயன்படுத்துவதை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தது.
மேலும், முன்னாள் அமைச்சர் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, அவரது பிணைப் பணத்தைப் பறிமுதல் செய்யவும், பிணையாளர்களிடமிருந்து பிணைத் தொகையை அறவிடவும் மாத்தறை பிரதம நீதவான் சதுர திஸாநாயக்க முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியில், குறித்த காணி கொள்வனவு தொடர்பான விசாரணைகளின் தொடர்ச்சியாகப் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்குத் தற்போது திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.