பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்ட அரச காணிகள் மீளக் கையகப்படுத்தப்படுகின்றன – 135 பேருக்கு எதிராக நடவடிக்கை!
பயிர்ச்செய்கை மற்றும் விவசாய முதலீடுகளுக்காக குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட அரச காணிகளை உரிய நோக்கத்திற்குப் பயன்படுத்தாமல் கைவிட்டுள்ள 135 பேரிடமிருந்து அந்தக் காணிகளை மீளக் கையகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடமிருந்து விவசாய நடவடிக்கைகளுக்காகக் காணிகளை குத்தகைக்கு பெற்றுக்கொண்ட போதிலும், அவற்றில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளாத 135 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் காணப்படும் விவசாயக் காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குத்தகை ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக குறித்த காணிகள் அடையாளம் காணப்பட்டு மீளக் கையகப்படுத்தப்படும்.
பின்னர், விவசாய உற்பத்தித் திட்டங்களைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அந்தக் காணிகள் மீண்டும் வழங்கப்படவுள்ளன.
விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்ட காணிகளை நீண்டகாலமாகப் பயன்படுத்தாமல் வைத்திருப்பது நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளைப் பாதிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் விவசாய உற்பத்தியை அதிகரித்தல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் கிராமப்புற மக்களுக்கு மேலதிக வருமான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.
அரச காணிகளின் உண்மையான பெறுமதி அவற்றைக் குத்தகை ஒப்பந்தங்களின் கீழ் வைத்திருப்பதில் அல்ல; மாறாக, அவை தேசிய உற்பத்திக்கும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்வதிலேயே தங்கியுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.