தென்கிழக்காசியாவின் 11 நாடுகளுக்கு இலவச சுற்றுலா மின்னணு விசா – இந்தியா முன்மொழிவு
தென்கிழக்காசியாவைச் சேர்ந்த 11 நாடுகளின் குடிமக்களுக்கு இலவச சுற்றுலா மின்னணு விசா (E-Tourist Visa) வழங்குவதற்கு இந்தியா முன்மொழிந்துள்ளது.
இந்தியாவுக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற 23ஆவது இந்தியா – ஆசியான் (ASEAN) உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த முன்மொழிவை அறிவித்தார்.
இதன் மூலம் புருணை, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, திமோர்-லெஸ்தே மற்றும் வியட்நாம் ஆகிய 11 நாடுகளின் குடிமக்கள் பயன்பெற வாய்ப்புள்ளது.
இந்தியாவுக்கும் ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி முன்வைத்த பல்வேறு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என இந்தியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம் சுற்றுலாத்துறை மேம்படுவதுடன், பயண வசதிகள் அதிகரித்து இரு பிராந்திய மக்களுக்கும் இடையிலான தொடர்புகளும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நீண்டகால கடல்சார் ஒத்துழைப்புத் திட்டம், இணையப் பாதுகாப்பு தடயவியல் பயிற்சி, முக்கிய கனிம வளங்கள் தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் சிவில் அணுசக்தித் துறையில் தொழில்நுட்பப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகளையும் இந்தியப் பிரதமர் முன்வைத்துள்ளார்.
மேலும், அனர்த்த முகாமைத்துவத் துறையில் இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
எனினும், இலவச மின்னணு சுற்றுலா விசா திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் திகதி மற்றும் அதற்கான தகைமை நிபந்தனைகள் தொடர்பான விரிவான அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை.
தென்கிழக்காசிய நாடுகளுடனான பொருளாதார, இராஜதந்திர மற்றும் கலாசார உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் இந்தியாவின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.