“தவெக எம்.எல்.ஏக்களுக்கு சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரமா?” – அண்ணாமலை கேள்வி
தமிழகத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு உண்மைகளை மறைக்க முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்தாரா, முதல்வர் அலுவலகத்துக்குப் புகார் சென்றடைந்ததா, முதல்வர் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை அழைத்து எச்சரித்தாரா என்பது குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் தெளிவற்ற நிலை காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதே குற்றச்சாட்டு ஒரு சாதாரணக் குடிமகன் மீது முன்வைக்கப்பட்டிருந்தால், தமிழக அரசு இதேபோன்று பொறுமையாக இருந்து புகார் அளிக்கப்பட்டதா, இல்லையா என விவாதித்துக் கொண்டிருக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தச் சூழலில் மறைந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணின் புகழ்பெற்ற கார்ட்டூன் ஒன்று நினைவுக்கு வருவதாகவும் அண்ணாமலை தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அதனைச் செயலில் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை தமிழக அரசு வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.