சீனாவின் Jetour T2 அடிப்படையில் புதிய SUV: இந்தியாவின் JSW நிறுவனம் அறிமுகப்படுத்தத் திட்டம்
இந்தியாவின் முன்னணி தொழில்துறை நிறுவனமான JSW Group, சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பில் 27,000 கோடி ரூபாய்) முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சீனத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய SUV ரக வாகனத்தைத் தனது சொந்த வர்த்தக நாமத்தின் கீழ் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
JSW நிறுவனத்தின் வாகன உற்பத்திப் பிரிவான JSW Motors, தனது முதலாவது பயணிகள் வாகனமான JSW Combat SUV ரக வாகனத்தை எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளது.
சீனாவின் Chery நிறுவனத்தின் Jetour வர்த்தக நாமத்தின் கீழ் தயாரிக்கப்படும் Jetour T2 மொடலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புதிய வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய உற்பத்தித் துறையும் சீன வாகனத் தொழில்நுட்பமும் இணைந்துள்ளன.
NDTV வெளியிட்டுள்ள தகவலின்படி, மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜிநகரில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் பாரிய வாகன உற்பத்தித் தொழிற்சாலையை JSW நிறுவனம் அமைத்து வருகிறது.
இந்தத் தொழிற்சாலையின் ஆரம்பகட்ட உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 500,000 வாகனங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகன உற்பத்தி, மின்கலத் தொகுப்பு, ஆராய்ச்சி மற்றும் உதிரிப்பாக விநியோகக் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இங்கு இயங்கவுள்ளன.
இந்தத் திட்டம், Jetour T2 அடிப்படையிலான SUV வாகனத்திற்கான முதலீடு மாத்திரமன்றி, JSW நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன உற்பத்தி விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்காக மொத்தம் 27,000 கோடி இந்திய ரூபாய்க்கும் அதிகமான முதலீடு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தனது முதலாவது பிளக்-இன் ஹைபிரிட் வாகனத்திற்காக இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட உதிரிப்பாக விநியோகஸ்தர்களுடன் JSW Motors இணைந்துள்ளது.
அறிமுகப்படுத்தப்படவுள்ள JSW Combat வாகனத்தில் 1.5 லீற்றர் டர்போ பெட்ரோல் இயந்திரத்துடன் இரண்டு மின்சார மோட்டார்கள் மற்றும் 18.4 kWh மின்கலம் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கட்டமைப்பின் மூலம் சுமார் 360 குதிரைச் சக்தியையும் 610 Nm முறுக்குவிசையையும் பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது. அத்துடன், NEDC பரிசோதனை முறையின்படி, மின்சார சக்தியை மாத்திரம் பயன்படுத்தி 90 கிலோமீற்றர் வரை பயணிக்கக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 15.6 அங்குல தொடுதிரை தகவல் மற்றும் பொழுதுபோக்கு கட்டமைப்பு, டிஜிட்டல் கருவிப் பலகை, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் மேம்பட்ட சாரதி உதவிக் கட்டமைப்புகள் உள்ளிட்ட நவீன வசதிகளும் இதில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், JSW Motors நிறுவனம் தனது உத்தியோகபூர்வ இந்திய இணையத்தளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஊடாக புதிய வாகனத்தில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், உத்தியோகபூர்வ அறிமுகத்திற்கு முன்னதாகத் தமது ஆர்வத்தைப் பதிவு செய்துகொள்ள முடியும்.
எனினும், இந்த வாகனத்திற்கான உத்தியோகபூர்வ விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. முன்பதிவுகளும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
இந்தியாவின் பயணிகள் வாகனச் சந்தையில் JSW Group கால்பதிப்பதற்கான முக்கிய நகர்வாக இது கருதப்படுவதுடன், சர்வதேச தொழில்நுட்பக் கூட்டாண்மைகளின் உதவியுடன் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் வாகனங்களைக் கொண்ட புதிய உற்பத்தித் தொடரை உருவாக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.