சவுதி மேற்குப் பகுதி வாழ் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை
சவுதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் நிலவிவரும் மாறிவரும் பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு, அங்கு வசிக்கும் இலங்கை குடிமக்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், உத்தியோகபூர்வ அவசரகால எச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறும் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான இலங்கையின் உத்தியோகபூர்வ தூதரகமான ஜெட்டாவில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் இந்த அவசரகால அறிவித்தலை வெளியிட்டுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பதற்றநிலையைக் கணக்கில் கொண்டு, இலங்கைக் குடிமக்கள் உடனடியாகப் பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்:
வீட்டிற்குள்ளும் கட்டிடங்களுக்குள்ளும் இருப்பவர்கள்: தமது நடமாடும் தொலைபேசிகளில் தேசிய எச்சரிக்கை அறிவித்தல் பெறப்பட்டால், உடனடியாக ஜன்னல்களிலிருந்து விலகி, பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும்.
வெளியில் இருப்பவர்கள்: உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்திற்குச் செல்ல வேண்டும் அல்லது உறுதியான சுவரின் பின்புறமாகப் பாதுகாப்பான மறைவிடத்தைத் தேடிக்கொள்ள வேண்டும். திறந்த வெளிகள், கண்ணாடிப் பகுதிகள், மாடங்கள் மற்றும் கூரைகள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் விலகியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாகன ஓட்டுநர்கள்: அவசரகால எச்சரிக்கையைப் பெறும் வாகன ஓட்டுநர்கள் , நிலைமை சீரடைந்துவிட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை, உடனடியாக வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு, பாலங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களிலிருந்து விலகிப் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும்.
கூட்ட நெரிசலைத் தவிர்த்தல்: இலங்கையர்கள் தேவையற்ற மக்கள் நடமாட்டம் உள்ள இடங்கள் மற்றும் ஆபத்து விளைவிக்கக்கூடிய பகுதிகளைத் தவிர்த்துக்கொள்வதுடன், உறுதிப்படுத்தப்படாத வதந்திகளைப் பரப்பாமல் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மட்டுமே சார்ந்து இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சட்டதிட்டங்களை மதித்தல்: எவ்வித சம்பவங்களையும் ஒளிப்படம் எடுப்பதோ (Photograph), காணொளியாகப் பதிவு செய்வதோ, சமூக வலைத்தளங்களில் அதுகுறித்த கருத்துகளைப் பகிர்வதோ கூடாது என கண்டிப்பாக எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், சவுதி அரேபியாவின் சட்டதிட்டங்களை முற்றிலுமாகப் பேணுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் அவசரகால உதவிகளுக்கு மக்கா மற்றும் மதீனா பிராந்தியங்களில் 911 என்ற இலக்கத்தினmம், சவுதி அரேபியாவின் பிற பகுதிகளில் 998 என்ற இலக்கத்தினmம் தொடர்பு கொள்ளலாம். இக்கட்டான அவசர சூழ்நிலைகளுக்குத் துரித உதவி பெற தூதரகத்தின் 056 098 6671 என்ற அவசரகாலத் தொடர்பு இலக்கத்தை நாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.