எர்பஸ் முறைகேடு வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கான 'எர்பஸ்' (Airbus) ரக விமானங்களைக் கொள்முதல் செய்த நடவடிக்கையின் போது, சுமார் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டின்கீழ், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், நாமல் ராஜபக்ஷ சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிணை கோரிக்கை தொடர்பான கட்டளையை செப்டம்பர் 23 ஆம் திகதி வழங்குவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த விமானக் கொள்முதலின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய பணச்சலவை வழக்கின் சந்தேகநபராக நாமல் ராஜபக்ஷ சமீபத்தில் பெயரிடப்பட்டார். ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், இந்த விசாரணை தொடர்பாகவே இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சார்பில் முன்னிலையான பிரதிச் சொலிசிட்டர் ஜெனரல் ஜானக பண்டாரவின் சமர்ப்பணங்கள் மற்றும் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தலைமையிலான சட்டத்தரணிகள் குழு முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த பின்னரே, கோட்டை நீதவான் பசான் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானக் கொள்முதல் தொடர்பான சர்ச்சைக்குரிய பணச்சலவை வழக்கிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. புலனாய்வு அதிகாரிகள் சமர்ப்பித்த சான்றுகளின் அடிப்படையில், சட்டமா அதிபரின் ஆலோசனைக் கமையவே நாமல் ராஜபக்ஷ இவ்வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.