மட்டக்குளியில் சொகுசு கார் மோதி கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்
கொழும்பு, மட்டக்குளி - கந்தஉட பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற கோர வீதி விபத்தில் நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் பலத்த காயமடைந்துள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று இரவு 7.30 மணியளவில் இத்துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது.
வத்தளைப் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாகப் பயணித்த சொகுசு கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அதே பாதையில் சென்று கொண்டிருந்த மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதி கடுமையான விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த ஆறு நபர்களும் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுள் நால்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். காயமடைந்த ஏனைய இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ள மட்டக்குளி பொலிஸார், விபத்துக்குக் காரணமான காரின் சாரதியைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.