சபரிமலை மண்டல கால தரிசனத்திற்கு இணையவழி முன்பதிவு ஆரம்பம்!
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறவுள்ள மண்டல கால வழிபாட்டிற்கான தரிசன முன்பதிவுகள் இன்று (அக்டோபர் 29) காலை ஆரம்பமாகியுள்ளன.
இதன்படி, பக்தர்கள் தாங்கள் பயணிக்க விரும்பும் பாதையைத் தெரிவு செய்து இணையவழியில் தரிசனத்திற்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்கள், ஓணம், மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு விசேட காலங்களில் கோயில் நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கமாகும்.
இதன் ஒரு பகுதியாக, எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி ஐப்பசி மாத சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு ஒருநாள் விசேட வழிபாடு நடைபெறவுள்ளது. இதற்காக நவம்பர் 6ஆம் திகதி மாலை கோயில் நடை திறக்கப்படவுள்ளது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரான சித்திரைத் திருநாள் பலராம வர்மனின் பிறந்தநாளை முன்னிட்டு, அன்றைய தினம் விசேட வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து, மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் திகதி மாலை கோயில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து 41 நாட்கள் வழிபாடுகள் நடைபெறவுள்ளன. இதற்கான இணையவழி தரிசன முன்பதிவுகளே இன்று ஆரம்பமாகியுள்ளன.
மேலும், மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக் காலங்களில் மட்டுமே வனப்பாதைகள் ஊடாக சபரிமலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதால், முன்பதிவின்போது தாங்கள் பயணிக்க விரும்பும் பாதையையும் தெரிவு செய்யுமாறு தேவசம் போர்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கமைய, பாரம்பரிய பாதையான எருமேலி – காளகட்டி (46 கிலோமீற்றர்), சத்திரம் – புல்மேடு (16 கிலோமீற்றர்) மற்றும் பம்பை – சபரிமலை (4 கிலோமீற்றர்) ஆகிய வழித்தடங்கள் தொடர்பான விபரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.