கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு – சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டைப் பெற நடவடிக்கை
கொழும்பு துறைமுகத்தில் அண்மையில் ஏற்பட்ட டீசல் கசிவினால் கடல் மற்றும் கரையோரச் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்து, அதற்குப் பொறுப்பான தரப்பினரிடமிருந்து இழப்பீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசுபாட்டைத் தடுக்கும் சட்டத்தின் கீழ், முத்துவெல்ல கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக அதிகாரசபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எண்ணெய்க் கசிவினால் கடல்சார் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று இன்று (23) முத்துவெல்ல கடற்கரைப் பகுதிக்குச் சென்றுள்ளது.
கடலுக்குள் கலந்த எரிபொருளின் பரவல் தற்போது சுமார் 95 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. எஞ்சியுள்ள எண்ணெயை அகற்றுவதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதற்கும், பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதிகளை மீளமைப்பதற்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த நவம்பர் 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தின் ஜயா கொள்கலன் முனையத்தில் (JCT) அமைந்துள்ள 108 ஆம் இலக்க சேமிப்புத் தாங்கியிலிருந்து டீசல் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்தே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
குறித்த தாங்கியில் சுமார் 1,000 மெட்ரிக் தொன் கடல்சார் எரிபொருள் எண்ணெய் (Marine Gas Oil) சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சேதமடைந்த வடிகால் வால்வு அல்லது குழாயில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே கசிவு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று காலை சுமார் 10.30 மணியளவில் இலங்கை துறைமுக அதிகாரசபையினால் கசிவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், அதற்கு முன்னதாக ஒரு தொகுதி டீசல் நகரின் வடிகால் கட்டமைப்புக்குள் சென்று, பின்னர் முத்துவெல்ல கடற்கரை ஊடாகக் கடலில் கலந்துள்ளது.
இதன் காரணமாக, மீன்பிடிப் படகுகள் நங்கூரமிடும் பகுதி உட்பட மூன்று கிலோமீற்றருக்கும் அதிகமான கடற்கரைப் பகுதி மாசடைந்துள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
எஞ்சியுள்ள எண்ணெயை அகற்றி, கடல் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய மேலதிக பாதிப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.