கொக்கல ரயில் விபத்து: பேருந்து சாரதிக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டு!
கொக்கலையில் ரயில் கடவையில் ரயிலுடன் மோதிய பேருந்தின் சாரதிக்கு எதிராக, விசாரணைகளின் அடிப்படையில் கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பொலிஸார் பரிசீலித்து வருகின்றனர்.
பேருந்தில் பயணித்த மாணவர்கள், ரயில் வருவதைக் கண்டு சாரதியை பேருந்தை நிறுத்துமாறு எச்சரித்த போதிலும், அவர் அதனைப் பொருட்படுத்தாமல் ரயில் கடவையைக் கடக்க முயன்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொட்டாவையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிக்கொண்டு மார்ட்டின் விக்கிரமசிங்க நாட்டுப்புற அருங்காட்சியகத்துக்குச் சென்றுவிட்டு மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.
ரயில் கடவையில் எச்சரிக்கை மணி ஒலித்துக்கொண்டிருந்ததுடன், சிவப்பு சமிக்ஞை விளக்குகளும் ஒளிர்ந்துகொண்டிருந்ததாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பேருந்துக்குள் இருந்த மாணவர்கள் ரயில் வருவதை அவதானித்து சாரதியை நிறுத்துமாறு சத்தமிட்டு எச்சரித்துள்ளனர். எனினும், அந்த எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் சாரதி பேருந்தை முன்னோக்கிச் செலுத்தியதால், ரயில் பேருந்தின் பின்பகுதியில் மோதியதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
13 மாணவர்கள் காயம்; ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்!
இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் எட்டு மாணவர்கள் வைத்தியசாலையின் 58ஆம் இலக்க விடுதியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றுமொரு மாணவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாணவர்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
இந்தச் சம்பவம் மிகவும் ஆபத்தானதும் பொறுப்பற்றதுமான வாகனச் செலுத்துகை எனப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய கவனக்குறைவான செயற்பாடு, முன்னர் இடம்பெற்ற யங்கல்மோதர ரயில் கடவை அனர்த்தத்தைப் போன்ற பாரிய துயரத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சாரதிக்கு போதைப்பொருள் பரிசோதனை
விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட மூச்சுப் பரிசோதனையில் அவர் மது அருந்தியிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
எனினும், மேலதிக விசாரணைகளுக்காக அவரைப் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரயில் கடவையில் தெளிவான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்ததுடன், பேருந்தில் பல மாணவர்கள் உள்ளிட்ட பயணிகள் இருந்த நிலையிலும் சாரதி முன்னோக்கிச் சென்றமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
விசாரணைகளின் முடிவுகளைப் பொறுத்து, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளைச் சாரதிக்கு எதிராக முன்வைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
வாகன சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை
ரயில் கடவைகளைக் கடக்கும்போது எச்சரிக்கை விளக்குகள், ஒலிச் சமிக்ஞைகள் மற்றும் கடவைப் பொறுப்பாளர்களின் அறிவுறுத்தல்களை வாகன சாரதிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனப் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
அவசரமாக ரயில் கடவையைக் கடக்க முயற்சிப்பது உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய பாரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.