குற்றக் கும்பலுக்கு ரி-56 துப்பாக்கியை விற்றதாகக் குற்றச்சாட்டு – டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்
தனது உத்தியோகபூர்வ கடமைகளுக்காக வழங்கப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலொன்றுக்கு விற்பனை செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 8 ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் காலப்பகுதியில் கல்கிசை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தனது உத்தியோகபூர்வ கடமைகளுக்காக வழங்கப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி மற்றும் 30 உயிருள்ள தோட்டாக்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலொன்றுக்கு விற்பனை செய்த பின்னர் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்தது.
26 வயதுடைய குறித்த சந்தேகநபர், ஹலம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இன்று (26) அதிகாலை டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் குழுவினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்குப் பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.