பாடசாலை மாணவர்கள் தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய மாதிரிச் சந்தை – அரசாங்கம் திட்டம்
பாடசாலை மாணவர்கள் தங்களது புத்தாக்க முயற்சிகள் மற்றும் சிறிய அளவிலான உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தி, அவற்றைச் சந்தைப்படுத்தவும் விற்பனை செய்யவும் நடைமுறை அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் மாதிரிச் சந்தையொன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் தொடர்பில் கைத்தொழில் அமைச்சுடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கு அமைச்சரும் பிரதி அமைச்சரும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் தேசிய வணிக முகாமைத்துவ நிறுவகத்தின் (NIBM) பொன்விழாக் கொண்டாட்டங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான சிறந்த புத்தாக்க வணிக மாதிரி விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டு முதல் தரம் 6 பாடத்திட்டத்தில் தொழில்முனைவோர் கல்வி மற்றும் நிதியியல் அறிவு ஆகிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஒவ்வொரு மாணவரையும் தொழில்முனைவோராக மாற்றுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல எனக் குறிப்பிட்ட பிரதமர், பொருளாதாரத்தைப் புரிந்துகொள்வதற்கும், நிதி தொடர்பான சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், வளர்ந்து வரும் நிதி மோசடிகள் மற்றும் சுரண்டல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் தேவையான அறிவையும் தன்னம்பிக்கையையும் மாணவர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், 2026ஆம் ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மூன்று கட்டங்களாக நாடளாவிய ரீதியில் 100 செயற்பாட்டு அடிப்படையிலான வர்த்தகக் கற்றல் நிலையங்களை அமைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் முதற்கட்டமாக 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 25 நிலையங்களை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வகுப்பறைகள் மற்றும் பாடப்புத்தகங்களுக்கு அப்பால் மாணவர்கள் நடைமுறை அனுபவங்களின் ஊடாகக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகள் பாடசாலை வகுப்பறைகளிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், புத்தாக்கச் சிந்தனைகளை நடைமுறைப் பொருளாதார மற்றும் சமூகப் பெறுமதிகளாக மாற்றுவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.