கீழ் கடுகண்ணாவையில் கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று இரவு தற்காலிகமாக மூடப்படும்
கீழ் கடுகண்ணாவை பகுதியில் கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (23) இரவு முதல் நாளை (24) காலை வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக இடைநிறுத்தப்படவுள்ளது.
கீழ் கடுகண்ணாவை பகுதியில் வீதியின் மீது விழும் அபாயம் உள்ள ஆபத்தான பாறைகளைப் பாதுகாப்பாக அகற்றுவதுடன், அதனுடன் தொடர்புடைய பராமரிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த வீதி மூடல் தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர நடவடிக்கை மையம் ஊடாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த நேரத்தில் கொழும்புக்கும் கண்டிக்கும் இடையில் பயணிக்கத் திட்டமிட்டுள்ள வாகன சாரதிகள் தமது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதுடன், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.