கடும் மழை: பாடசாலைகளை மூடுவது தொடர்பில் மாகாண அதிகாரிகளுக்கு அதிகாரம்!
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாடசாலைகளைத் தற்காலிகமாக மூடுவது தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் பெய்துவரும் கடும் மழையினால் பாடசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டு கல்வி அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதற்கமைய, தத்தமது மாகாணங்களிலுள்ள பாடசாலைகளைத் தொடர்ந்து நடத்துவதா அல்லது தற்காலிகமாக மூடுவதா என்பது குறித்து மாகாணக் கல்வி அதிகாரிகள் தீர்மானிக்க முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் நிலவும் அனர்த்த நிலைமை, வெள்ள அபாயம் மற்றும் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்படும் தடைகள் உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் வானிலை நிலைமைகள் மற்றும் பாதுகாப்பான முறையில் பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்திற்கொண்டு உரிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மாகாண அதிகாரிகளுக்கு இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.