இஸ்ரேல் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளது – ஐ.நா. விசாரணைக் குழு
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்களில் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன சர்வதேச விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
இன அழிப்பு, துன்புறுத்தல், சித்திரவதை, பாலியல் வன்புணர்வு மற்றும் ஏனைய பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா அலுவலகம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலியப் படைகள் பலஸ்தீனப் பொதுமக்களை வேண்டுமென்றே இலக்கு வைத்ததாக விசாரணைக் குழு கண்டறிந்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2026 ஒக்டோபர் 14ஆம் திகதியிடப்பட்டு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் ஐந்தாவது அறிக்கையில் இந்த விடயங்கள் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. 2023 ஒக்டோபர் மாதத்திலிருந்து இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள், உடல் மற்றும் உள ரீதியான கடுமையான பாதிப்புகள் தொடர்பில் இந்த அறிக்கை ஆராய்கிறது.
75,000க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழப்பு
2023 ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்களில் 75,000க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் குறைந்தது 21,500 பேர் சிறுவர்கள் என்றும், 11,000 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகள், பலஸ்தீனப் பொதுமக்களுக்கு எதிரான பரந்துபட்ட மற்றும் திட்டமிட்ட தாக்குதலின் ஒரு பகுதியாக அமைந்துள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
வேண்டுமென்றே கொலை செய்தல், அளவுக்கு அதிகமான பலத்தைப் பயன்படுத்துதல் மற்றும் பாரபட்சமான நடைமுறைகளைக் கையாளுதல் உள்ளிட்ட செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
சிறுவர்களும் இலக்கு வைக்கப்பட்டதாகக் கண்டறிவு
இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படைகள் இன அழிப்பு, சித்திரவதை, பாலியல் வன்புணர்வு, பாலியல் வன்முறை மற்றும் தேசியம், இனம் ஆகியவற்றின் அடிப்படையிலான துன்புறுத்தல் உள்ளிட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைக் குழு குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, காசா மற்றும் மேற்குக் கரையில் பலஸ்தீனச் சிறுவர்கள் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், வயதின் அடிப்படையில் அவர்கள் துன்புறுத்தப்பட்டமை தொடர்பில் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
காசாவில் இன அழிப்பு தொடர்பான முந்தைய கண்டறிவுகள் மீண்டும் உறுதிப்படுத்தல்
காசா தொடர்பில் முன்னர் வெளியிடப்பட்ட தனது கண்டறிவுகளையும் விசாரணைக் குழு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் படைகள் காசாவில் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் குழு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
தற்போதைய அறிக்கையில் ஆராயப்பட்ட சம்பவங்கள், இன அழிப்பு நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட செயல்கள் தொடர்வதைக் காட்டுவதாகவும் விசாரணைக் குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும், இஸ்ரேலியக் காவலில் வைக்கப்பட்டிருந்த பலஸ்தீனர்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பிலும் புதிய சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
பாலியல் வன்புணர்வு, கட்டாயமாக ஆடைகளை அகற்றுதல் மற்றும் மனித கண்ணியத்தைச் சீர்குலைக்கும் ஏனைய நடத்தைகள் உள்ளிட்டவை இவற்றில் அடங்குவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குக் கரையில் வான்வழித் தாக்குதல்களால் 254 பேர் உயிரிழப்பு
2023 ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் 2026 செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில், மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 254 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதற்கு மாறாக, 2008ஆம் ஆண்டு முதல் 2023 ஒக்டோபர் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்குக் கரையில் இடம்பெற்ற வான்வழித் தாக்குதல்களில் ஆறு பேர் மாத்திரமே உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரிக்கை
பலஸ்தீனப் பிரதேசங்கள் மீதான இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், சர்வதேச சட்ட மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விசாரணைக் குழு வலியுறுத்தியுள்ளது.
எனினும், விசாரணைக் குழுவின் கண்டறிவுகளை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.
இந்த அறிக்கை, இஸ்ரேலை அவதூறுக்கு உட்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தவறான தகவல் பரப்பல் நடவடிக்கையின் ஒரு பகுதி என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.