இலங்கையில் 20–24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!
இலங்கையில் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் தொற்றுநோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேசிய பாலியல் தொற்றுநோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசனை சமூக வைத்திய நிபுணர் மாதவி குணரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களிடையே புதிதாக 88 எச்.ஐ.வி தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றில் 78 சம்பவங்கள், அதாவது சுமார் 89 சதவீதமானவை, 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகளிடையே பதிவாகியுள்ளன.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் இலங்கையில் மொத்தமாக 708 புதிய எச்.ஐ.வி தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் முதலாவது எச்.ஐ.வி தொற்றுச் சம்பவம் 1987ஆம் ஆண்டு பதிவானதிலிருந்து, 2026 செப்டெம்பர் மாத இறுதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 8,111 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.