இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் அனைத்து நாடுகளுடனும் ‘நேர்மறையான உறவுகள்’ – சஜித் பிரேமதாச வலியுறுத்தல்
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையானது பாரம்பரிய அணிசேராக் கொள்கைக்கு அப்பால் சென்று, அனைத்து நாடுகளுடனும் ‘நேர்மறையான உறவுகளை’ (Positive Alignments) கட்டியெழுப்பும் வகையில் அமைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் மக்களின் நலனுக்கும் ஆதரவளிக்கும் வகையில், அதிகளவான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் ஆக்கபூர்வமான உறவுகளை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கருதுவதாகத் தெரிவித்தார்.
இலங்கையின் தேசிய நலன்களைப் பாதுகாத்தல், பொருளாதார இராஜதந்திரத்தை வலுப்படுத்துதல், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் நாட்டின் மூலோபாய ரீதியான புவியியல் அமைவிடத்தைச் சரியாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்ததும் முனைப்பானதுமான வெளிநாட்டுக் கொள்கை அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டுக் கொள்கையை மதிப்பீடு செய்வதற்கான 12 முக்கிய அடிப்படைகளை முன்வைத்த சஜித் பிரேமதாச, சர்வதேச ஒத்துழைப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை, வர்த்தகம், மனித உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் நலன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு (SAARC), பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (BIMSTEC), இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கம் (IORA) போன்ற அமைப்புகள் ஊடாகப் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் கடல்சார் வளங்களைப் பாதுகாப்பதுடன், நிலையான அபிவிருத்தியை ஊக்குவித்து, பிராந்திய நாடுகளுடனான கூட்டாண்மைகளையும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
அத்துடன், வெளிநாட்டுக் கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில், புதிய நிறுவனக் கட்டமைப்புகள் மற்றும் கொள்கை ஆய்வு மையங்களை (Think Tanks) உருவாக்கி, நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைத் தீர்மானம் எடுக்கும் செயல்முறையை நவீனமயப்படுத்த வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார்.
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, இலங்கையின் தேசிய நலன்களையும் 2.2 கோடி மக்களின் நலன்களையும் முன்னிறுத்தும் சர்வதேச முயற்சிகளுக்கு எதிர்க்கட்சி ஆக்கபூர்வமான ஆதரவை வழங்கும் என்றும் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.