இந்தியா, இஸ்ரேலுக்கு எதிராக புதிய பயங்கரவாத அலை: இஸ்ரேலிய தூதர் எச்சரிக்கை!
இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு எதிராக ஒரு புதிய இஸ்லாமியப் பயங்கரவாத அலை உருவாகி வருவதாக இந்தியாவுக்கான இஸ்ரேலியத் தூதுவர் ரூவன் அசார் (Reuven Azar) திடுக்கிடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த சிறப்பு நேர்காணலிலேயே அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற 'ஃபிளை துபாய்' (flydubai) விமானச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்நிலைமை தீவிரமடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், பயங்கரவாத அச்சுறுத்தல்களை முறியடிக்க உலக நாடுகள் மிக விரைவாகவும் விழிப்புடனும் தொழிற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நேர்காணலின் போது இஸ்ரேலியத் தூதுவர் வெளியிட்ட முக்கிய கருத்துக்கள்:
துரிதமான நடவடிக்கை அவசியம்: "பயங்கரவாதிகள் நம்மை விடவும் மிகவும் விரைவாகச் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை நாம் முறியடிக்க வேண்டுமானால், நமது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் தீவிர விழிப்புணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும். அடுத்தகட்ட பயங்கரவாதத் தாக்குதல் அலையை முன்கூட்டியே தடுத்து நிறுத்த வேண்டுமாயின், நாம் தாமதமின்றிச் செயல்பட வேண்டும். ஏனெனில் அடுத்தகட்ட அலை உருவாவது நிச்சயம்."
ஹமாஸ் மற்றும் தெற்காசியப் பயங்கரவாத அமைப்புகளின் கூட்டிணைவு: ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் சிலர் அண்மைக்காலமாகப் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜெய்ஷ்-இ-மொஹம்மட் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகள் ஒருங்கிணைத்த நிகழ்வுகளில், ஹமாஸின் நஜி ஜாஹிர் மற்றும் காலித் அல் கடுமி ஆகியோர் பங்கேற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் பின்னணி: 2025 ஆம் ஆண்டு இடம்பெற்ற பஹல்காம் தாக்குதலானது ஹமாஸ் அமைப்பின் தாக்குதல் உத்திகளின் ஒரு வெளிப்பாடாகும். பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாதக் குழுக்களை ஹமாஸ் அமைப்பு பெருமளவில் ஈர்த்துள்ளது. ஹமாஸ் பிரதிநிதிகள் தொடர்ச்சியாகப் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதன் பின்னணியில் உள்ள முழுமையான சதித்திட்டம் இன்னும் வெளிவரவில்லை என்ற போதிலும், இந்த பயங்கரவாதக் கூட்டிணைவு என்பது தற்போதைய நிஜமான அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ஃபிளை துபாய் சம்பவம் மற்றும் விமானியின் தீரச்செயல்: அண்மையில் ஃபிளை துபாய் விமானத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒரு தனிப்பட்ட நபரால் நடத்தப்பட்ட ‘ஓநாய் தாக்குதலா’ என்பது தொடர்பான விசாரணைகள் இன்னமும் நிறைவடையவில்லை. எனினும், இதுபோன்ற எதிர்பாராத தாக்குதல்களே தற்காலத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.
பொதுவாக இதுபோன்ற அவசரகாலச் சம்பவங்கள் நிகழும்போது, அது உடனடியாகச் சம்மந்தப்பட்ட நாடுகளின் தலைவர்களுக்கு அறிவிக்கப்படும். பயணிகள் விமானமோ அல்லது ஜெட் (Jet) விமானமோ எதுவாக இருப்பினும், அச்சுறுத்தலுக்குள்ளான விமானத்தை வான்வெளியில் இடைமறித்துத் தாக்குதல் நடத்த வேண்டுமா என்பதைப் நாட்டின் பிரதமரோ அல்லது உயர்மட்டத் தலைமையோ தீர்மானிக்கும்.
ஆனால், இந்தச் சம்பவத்தில் அசாதாரணமான துணிச்சலை வெளிப்படுத்திய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் அவர்களின் சாதுர்யமான நடவடிக்கையினாலும், பயணிகளின் தைரியத்தினாலுமே ஒரு பாரிய பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளது. விமானி ஸ்மித் மச்சாரின் இந்த வீரச் செயலுக்குச் சிறப்பு நன்றிகளைத் தெரிவிப்பதாக இஸ்ரேலியத் தூதுவர் மேலும் குறிப்பிட்டார்.