2 நாளில் 9 கொலைகள்: முதல்வர் விஜய்யை சாடும் உதயநிதி, கனிமொழி!
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோர், முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மையே இதற்குக் காரணம் என எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் கடுமையாகச் சாடியுள்ளனர்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தமிழகத்தில் பட்டப்பகலில் நடந்த இரட்டைக் கொலை உட்பட, கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்துள்ளன. நெல்லையில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் ஆகிய சகோதரர்கள் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்ட சம்பவமும், சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா வியாபாரப் போட்டியில் அஜித் என்ற வாலிபர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை எனக் குறிப்பிட்ட அவர், பரமக்குடியில் பெண் காவலர் கண்ணகி தள்ளிவிடப்பட்டு உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார். மயிலாடுதுறை, திருவண்ணாமலை, சேலம், கன்னியாகுமரி, தேனி கூடலூர் என மாநிலத்தின் பல பகுதிகளிலும் கொலைகள் தொடர்வதாகச் சாடிய உதயநிதி, "கொத்துக் கொத்தாக கொலைகள் நடக்கும் இந்த வேளையில், யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த ‘ரீல்ஸ்’ ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர்? இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட அவர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல், கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தளப் பதிவில், "சென்னை ஐஸ் ஹவுஸில் அஜித் என்ற இளைஞர், அவரது பெற்றோரின் கண் முன்பே படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் உணவுப் பொருட்களின் விலையும், கொலைகளும்தான் போட்டி போட்டுக்கொண்டு உயர்கின்றன" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து விஜய்யைச் சாடிய அவர், "திமுகவை விமர்சிப்பதற்கான ஸ்கிரிப்டை மனப்பாடம் செய்வதில் காட்டும் அக்கறையை, முதல்வர் விஜய் தன்வசமுள்ள காவல்துறையைச் செயல்படுத்துவதில் காட்டியிருந்தால் இதுபோன்ற கொடூரங்களைத் தடுத்திருக்கலாம். இனியாவது அதைச் செய்வாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.