கதர் ஆடைகளையும் உள்ளூர் பொருட்களையும் வாங்குமாறு தமிழக முதல்வர் விஜய் வேண்டுகோள்
மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி, தமிழக மக்கள் அனைவரும் கதர் ஆடைகளையும் கிராமியப் பொருட்களையும் வாங்கி, நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அண்ணல் மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-ஆம் திகதி, நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றையும், எளிமை, சுயசார்பு மற்றும் மனிதநேயத்தையும் நினைவுகூரும் சிறப்புமிக்க நாளாகும். அகிம்சை வழியில் போராடிய காந்தியடிகள், கைராட்டை மூலம் நாட்டின் பொருளாதார சுதந்திரத்தையும் சுயநம்பிக்கையையும் போதித்தார்.
கதர் ஆடைகளையும் உள்ளூர் கைவினைப் பொருட்களையும் கொள்வனவு செய்வதன் மூலம், நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் உழைப்புக்குத் தகுந்த அங்கீகாரமும் மரியாதையும் கிடைப்பதுடன், மண்ணின் உற்பத்தித் திறனும் ஊக்குவிக்கப்படுகிறது.
தற்காலத்தில், சூழல்நேய இயற்கை ஆடைகளுக்கான தேவை உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் இணைத்து, புதிய வடிவமைப்புகளுடன் மின்னணு வணிக (E-commerce) தளங்கள் மூலமாகவும் கதர் பொருட்களை விற்பனை செய்து வருகின்றது.
அத்துடன், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கதர் அங்காடி மையங்கள் மூலம் ஆண்டு முழுவதும் பருத்தி, பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகின்றது.
எனவே, இச்சலுகையைப் பயன்படுத்தி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், இளைஞர்கள் உட்படப் பொதுமக்கள் அனைவரும் கதர் ஆடைகளையும் உள்ளூர் உற்பத்திகளையும் வாங்கி, நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.